October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க மக்களின் வெளிநடமாட்டம் தான் காரணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஊரடங்கானது ஒரு கசப்பு மருந்துதான் என்றாலும் அதை மக்கள் அருந்திதான் ஆகவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது தமிழகத்தில் கொரோனா சங்கிலியை உடைக்க தளர்வுகளற்ற ஊரடங்கு இன்று (திங்கட் கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினசரி 35 ஆயிரத்தை கடந்து பீதியடைய வைக்கின்றதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 17 ஆயிரம் புதிய படுக்கைகள் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் இதில் 7 ஆயிரம் படுக்கைகள் ஒக்சிஜன் வசதியுடன் கூடியவை, 30 சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்று இரண்டு வாரங்கள் தான் ஆகின்றது. இந்த இரண்டு வாரத்தில் கொரோனா நிவாரண உதவியாக முதல் தவணை இரண்டாயிரம், ஆவின்பால் 3 ரூபாய் குறைப்பு, மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிதாக 2000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 6000 செவிலியர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாகவே மாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த முழு ஊரடங்கை மக்கள் முழுமையாக பின்பற்றினால் கொரோனா சங்கிலியை முற்றிலுமாக ஒழித்திடலாம்.

எனவே, நாட்டு மக்கள் அனைவரையும் கெஞ்சி கேட்கிறேன். அனைவரும் அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீட்டிலேயே இருங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.