July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒக்ஸிஜன், தடுப்பூசிகளை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை; மு.க.ஸ்டாலின் உத்தரவு

கொரோனா தடுப்பூசி, மருத்துவ ஒக்ஸிஜன் மற்றும் கொரோனா மருந்துகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஒக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், நிரந்தர தீர்வாக தமிழகத்திலேயே ஒக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஒக்ஸிஜன் ,தடுப்பூசி, மருந்து போன்றவற்றை தமிழகத்திலேயே உற்பத்தி செய்தால் கொரோனாவை தடுக்கவும் கட்டுக்குள் கொண்டுவரவும் உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 18 – 44 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் நடைமுறை தமிழகத்தில் அமுலுக்கு வராமலேயே இருக்கிறது.

இதை சரி செய்வதற்கு கடந்த வாரம் சர்வதேச அளவில் தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளி தமிழக அரசால் கோரப்பட்டது.

மேலும், 5 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளதுடன், 90 நாட்களில் இந்த தடுப்பூசிகளை விநியோகிக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் தெரிவித்தது.

இதனையடுத்தே கொரோனா தடுப்பூசி மருந்துகள், ஒக்ஸிஜன் போன்றவற்றின் தட்டுப்பாட்டை போக்கவே தமிழகத்திலேயே உற்பத்தியை தொடங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.