November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய உலகளாவிய கேள்வி மனு கோரலை வெளியிட்டது தமிழக அரசு!

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்போது 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான உலகளாவிய கேள்வி மனு கோரலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகின்ற போதிலும் 18 வயதில் இருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கமைய உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து கேள்விமனு கோரல் (டெண்டர்) மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

அதன்படி 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கான கேள்விமனு கோரல் அறிவிப்பு தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கேள்விமனு கோரலுக்கு ஜூன் 5ஆம் திகதி காலை 11 மணிக்குள் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,658 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மேலும் 6,640 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 82 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக மேலும் 303 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே தமிழகத்தில் 20,905 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதுடன்,  2,07,789 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.