தமிழகத்தில் கொரோனா நிலைமை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் கலந்தாலோசனை நடைபெற்றது.
இதன்போது, ‘பொய்யுரை, புகழுரையை கேட்க நான் விரும்பவில்லை. அதிகாரிகள் உள்ளதை உள்ளபடி முன்வைத்து பிரச்சினைகளை சந்திக்க வேண்டும்’ என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக மக்களின் வாழ்வாதாரம், வாழ்க்கையை பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ளதுடன், தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசர, அவசிய தேவை ஏற்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை கூடுதலாக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தகுதியான அனைவரும் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.