November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முதல்வரானதும் ஸ்டாலின் முதல் கையெழுத்தில் பிறப்பித்த அரசாணைகள்

‘தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் 23 ஆவது முதல்வராக இன்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்திலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான், என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்,

காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் – திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.

Facebook/MKStalin

இதேவேளை ஸ்டாலின் தனது பதவிப்பிராமாணத்தையடுத்து முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்த பின்னர் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கொவிட் 19 நிவாரணத்தொகை, மகளிருக்கு கட்டணமில்லா பயணச்சலுகை, பால் விலை குறைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்துக்கு புதிய துறை, தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டின்கீழ் கொவிட்19 சிகிச்சை என்ற ஐந்து விடயங்களை நடைமுறைப்படுத்தி அவர் தனது முதலாவது கையெழுத்தை இட்டார்.

அதன் பின்னர் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் முதலமைச்சர ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

இதுதவிர முதல் முறையாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற ஒரு துறையை தலைமைச் செயலகத்தில் உருவாக்கியிருக்கிறார்.

பிரச்சார காலத்தில் மக்களிடம் பெற்றுக்கொண்ட கோரிக்கை மனுக்களை 100 நாட்களுக்குள் விசாரித்து அவற்றை தீர்த்து வைப்பதற்காக இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.