January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்கு வங்க முதல்வராக 3 ஆவது முறையாகவும் பதவியேற்றார் மம்தா பானர்ஜி

இந்தியாவின் மேற்கு வங்க மாநில முதல்வராக 3 ஆவது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்றுள்ளார்.

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் அந்த மாநிலத்தின் 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கான வாக்களிப்புகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த 2 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

இதில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

இந்தக் கட்சிக்கு அடுத்தபடியாக பாரதிய ஜனதா கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்தநிலையில் மேற்கு வங்காளத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 தினங்களாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் நோக்கிலேயே வன்முறைகளை தூண்டிவிட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது.

இந்நிலையில் ஆளுநரை சந்தித்த மம்தா பானர்ஜி ஆட்சியமைக்க உரிமை கோரியதுடன், ஏற்கனவே வகித்து வந்த முதல்வர் பதவியை இராஜினாமா செய்து கடிதத்தையும் வழங்கினார்.

அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் மீண்டும் முதல்வர் பதவியை ஏற்கும்படி மம்தாவை கேட்டுக்கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட மம்தா பானர்ஜி இன்று காலை 10.45 மணியளவில் 3 ஆவது முறையாகவும் முதல்வராக பதவியேற்றுள்ளார்.