தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக தனித்து 133 ஆசனங்களை பெற்று வெற்றியடைந்துள்ள நிலையில் தமது ஆட்சியை அமைப்பதற்காக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
தேர்தலில் திமுக கூட்டணியாக 159 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது. இதில் திமுக தனித்து 133 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், மாதிமுக 4 இடங்களிலும், விசிக 4 இடங்களிலும், சிபிஐ 2 இடங்களிலும், சிபிஎம் 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.
இதேவேளை அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன் இதில் அதிமுக தனித்து 66 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், பாமக 5 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.
இந்நிலையில் அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இதற்கமைய முதல்வராக ஸ்டாலின் பதவியேற்கவுள்ள நிலையில், தமது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் அனுமதியை பெற்றுக்கொள்ளும் வகையில் நாளைய தினத்தில் அவர்களை ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை வேறு சில முக்கிய தீர்மானங்களும் இதன்போது எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை காலை அண்ணா அறிவாலயத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் முதல்வர் தெரிவு தொடர்பாக ஆளுநருக்கு அறிவித்து பதவியேற்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது.