தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 178 தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.
வழக்கமாக தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி , கடந்த தேர்தல்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் 6,7 ,10 என்று பின்னடைவில் இருந்தது.
2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.07 % வாக்குகளைப் பெற்று ஒன்பதாமிடத்தை பெற்றது.
ஆனால் இந்த வருடம் சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு அடுத்தப்படியாக நாம் தமிழர் கட்சி அதிகளவான வாக்குகளை பெற்று மூன்றாவது, இடத்தைப் பிடித்திருப்பது மிக முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.
பொதுவாக தேமுதிக ,மதிமுக, காங்கிரஸ் ,பாஜக, விடுதலை சிறுத்தைகள் ,பாமக, அமமுக, பாமக என பல கட்சிகளையும் பின்னால் தள்ளி பெரும்பான்மையான தொகுதிகளிலும் அதிகபடியான வாக்குகளுடன் மூன்றாவது இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்திருப்பது தமிழகத்தில் முக்கியமாக பேசப்படும் விடயமாகியுள்ளது.
திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வியை சந்தித்தாலும் கூட, 178 இடங்களில் அவரது கட்சி வேட்பாளர்கள் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.
மூன்றாவது இடத்தை எந்தக் கட்சி பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு தேர்தலுக்கு முன்பே எல்லார் மத்தியிலும் எழுந்தது. தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவியதால் 3 ஆவது இடத்தை அமமுக கூட்டணி பிடிக்குமா அல்லது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி பிடிக்குமா என்று பரவலாக பேசப்பட்டது.
ஆனால் அந்தக் கட்சிகளையும் முந்திக்கொண்டு மூன்றாம் நிலைக்கு வந்துள்ள நாம் தமிழர் கட்சிக்கு எதிர்கால தேர்தல்களில் முன் நோக்கி செல்வதற்கான ஒரு அடித்தளமாக அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.