July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

தமிழகம் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.

தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. அத்துடன் காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற்றது.

தமிழக தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், 76 மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணும் பணிகளில் 16 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் கடமையாற்றுகின்றனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.

அதன்பின் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு சுற்றுக்களாக எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர்.

இதன்படி 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அத்துடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 12 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

இதேவேளை புதுச்சேரி, கேரளா,அசாம், மேற்குவங்கம் ஆகிய சட்டமன்றங்களுக்கான வாக்குகளும் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.