இந்தியாவில் கொரோனா தொற்று வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இங்கு ஒரே நாளில் 379,257 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அத்தோடு 3,645 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது நாட்டில் இதுவரை பதிவான அதிகூடிய தினசரி பலி எண்ணிக்கை ஆகும்.
பூங்காக்களும், வாகன தரிப்பிடங்களும் சுடுகாடாக மாற்றப்பட்டு 24 மணிநேரமும் இயங்கிக்கொண்டுள்ளன.
ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட தொடர்புகளை பயன்படுத்தி, மருத்துவமனை படுக்கைகள், ஒக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளின் படுக்கைகளை தேடுகிறார்கள்.
மருத்துவமனை படுக்கைகளின் பற்றாக்குறையை ஈடுசெய்ய விடுதிகளும் ரயில் பெட்டிகளும் நோயாளிகளின் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இந்தியாவை கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மீட்க இதுவரை 40க்கும் மேற்பட்ட நாடுகள் அவசரமாக உதவிகளை வழங்க முன் வந்துள்ளன.
இந்தியாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை புதன்கிழமை 200,000 ஐ கடந்ததாக அறிவிக்கப்பட்ட போதும் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
உலகின் இரண்டாவது அதிக சனத்தொகையை கொண்ட இந்தியாவில் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவதே நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு உதவும் ஒரே வழி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சனிக்கிழமை முதல் தடுப்பூசியை பெறுவதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியது. எனினும் பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் தடுப்பூசி போடும் பணி இடைநிறுத்தப்பட்டும் குறைக்கப்பட்டும் உள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் முக்கிய துறை அமைச்சர்களுடன் நாளை (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒக்சிஜன், படுக்கை வசதி, மருந்து உள்ளிட்டவற்றை அதிகப்படுத்துவது, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே அமெரிக்கா தன்னுடைய பிரஜைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறுமாறு தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில்; ” இந்தியாவில் அனைத்து வகையான மருத்துவ சேவைகளுக்கான அணுகல் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டு வருகிறது” என எச்சரித்துள்ளது.
மருத்துவமனைகளில் இடம் இல்லாததால் சில அமெரிக்கப் பிரஜைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள தூதரகம், இந்தியாவை விட்டு வெளியேற விரும்பும் அமெரிக்கப் பிரஜைகள் கிடைக்கக்கூடிய வணிக போக்குவரத்துகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.