January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் 2 ஆவது கொரோனா அலை: பிரச்சனைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் கொரோனா 2 ஆவது அலையில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒக்ஸிஜன் பிரச்சினை போன்றவை பற்றி உச்ச நீதிமன்றம் தாமாக வழக்குப்பதிவு செய்துள்ளதுடன், அந்த வழக்கு  விசாரணைக்கு வந்தது.

இதன்போது கொரோனா 2 வது அலையில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ஒக்ஸிஜன் உள்ளிட்ட விவகாரங்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிப்பதையே விரும்புகிறோம் எனவும் உயர் நீதிமன்றங்கள் விசாரித்தாலும் நாங்களும் மௌனமாக இருப்பதை விரும்பவில்லை. ஒக்ஸிஜன் என்பது நாடு சார்ந்த பிரச்சனை. அதை அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன் உய ர்நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்கு வராத விவகாரங்களை நாங்கள் விசாரிக்கிறோம். தேசிய அளவிலான பிரச்சினைகளை முன்னின்று விசாரிக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் பொறுப்பு என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் ஒக்ஸிஜன் கையிருப்பை வெற்றிகரமாக கையாளுவதாக தெரிவித்தார்.

கொரோனா இரண்டாம் அலையில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள், ஒக்ஸிஜன் விநியோகம், ரெம்டெசிவர் கையிருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவை பற்றி அறிக்கை தர மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.