
இந்தியாவில் கொரோனாவின் 2 ஆவது அலை பரவ தொடங்கியுள்ள நிலையில், அங்கு சுகாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.
இதனிடையே, கொரோனா பரவல் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திடம் இந்திய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்த விடயம் தொடர்பில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் இந்த வேண்டுகோளை அடுத்து டுவிட்டரில் 50க்கும் மேற்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டதுடன் இன்னும் சில பதிவுகளை பார்க்க முடியாதுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்தியாவில் அதிக தொற்றாளர்களும் இறப்புகளும் பதிவாகி வருவதுடன், பல மருத்துவமனைகள் ஒக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.
இதனிடையே, “அரசாங்கம் ஒக்ஸிஜன் விநியோகத்தை உறுதி செய்வதை விடவும் டுவிட்டர் பதிவுகளை நீக்குவதற்கான வழியை எளிதாக செய்துள்ளது” என பயனர்கள் டுவிட்டரில் விசனம் வெளியிட்டுள்ளனர்.
டுவிட்டர் பதிவுகளை தணிக்கை செய்ய இந்திய அரசாங்கம் பிறப்பித்த அவசர உத்தரவையடுத்து, கொரோனா பரவலுக்கு இந்திய பிரதமர் மோடியை குற்றம் சுமத்தும் வகையில் வெளியிடப்பட்ட டுவிட்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பல கொரோனா வைத்தியசாலைகள் நோயாளர்களினால் நிரம்பியதையடுத்து, நோயாளிகள் வீட்டிலேயே அவதிப்படுகிறார்கள். ஒட்சிசன் தேவையை நிவர்த்தி செய்ய உலக நாடுகள் இந்தியாவுக்கு அவசர உதவிகளை செய்ய முன்வந்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 352,991 புதிய தொற்றாளர்கள் பதிவானதுடன் 2,812 இறப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.