January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஸ்டெர்லைட் ஆலையில் ஏன் தமிழக அரசு ஒக்ஸிஜன் தயாரிக்க கூடாது?”: உச்ச நீதிமன்றம் கேள்வி

ஒக்ஸிஜன் இன்றி மக்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என தமிழக அரசு கூறுவது சரியா? என இந்திய உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஒக்ஸிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள உற்பத்திக் கூடத்தில் ஒக்ஸிஜனை தயாரித்து இலவசமாக வழங்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த மனு நேற்றையதினம் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஒக்ஸிஜனை தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் இந்த மனு தொடர்பான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஆலையை திறக்கக்கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிக்கை அனுப்பியிருப்பதாகவும் அதனால் ஆலையை திறக்க அனுமதி அளிக்கக்கூடாது என்றும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்தினாலும் கவலை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ‘நிறுவனத்தை நாங்கள் எடுத்து நடத்தினாலும் தூத்துக்குடி பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருக்கிறது ஸ்டெர்லைட் ஆலை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் என தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ‘இந்த காரணத்தை ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் ஸ்டெர்லைட் ஆலையில் ஏன் தமிழக அரசு ஒக்ஸிஜன் தயாரிக்க கூடாது? மக்களின் உயிர் தான் முக்கியம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.