November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா; 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 68ஆயிரம் பேருக்கு தொற்று

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 68ஆயிரத்து 912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.35 கோடியாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நாடுகளின் பட்டியலில் பிரேஸிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது.

இதேவேளை, மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் 75 ஆயிரத்து 86 பேர் நலம்பெற்று வீடு திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 904 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

கொரோனா தொற்றுக்குள்ளான 1 கோடியே 21 லட்சத்து 56ஆயிரத்து 529 பேர் இதுவரை நலம் பெற்றுள்ளனர்.

இந்தியா முழுவதும் 12 லட்சத்து ஆயிரத்து 9 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை ஒரு லட்சத்து 70ஆயிரத்து 179 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு இந்தியாவில் இதுவரை 10 கோடியே 45 லட்சத்து 28ஆயிரத்து 565 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம், 31.2 மில்லியன் நோயாளர்களை கொண்டுள்ள அமெரிக்கா தொடர்ந்தும் தொற்று நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.