November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 22 இந்தியப் படை வீரர்கள் பலி

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சண்டையில் 22 படை வீரர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஜப்பூர்- சுக்மா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளதால், அங்கு பதுங்கி இருக்கும் மாவோயிஸ்டுகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து அதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

இதன்போது 22 படையினர் உயிரிழந்துள்ள அதேவேளை, படையினரின் பதில் தாக்குதலில் 9 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அந்நாட்டுக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதன்போது, ‘இந்திய வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்க முடியாது, தேசம் என்றும் நினைவில் கொள்ளும்’ என குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ‘காயமடைந்த வீரர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என்றும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வீரர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமித்ஷா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.