January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல்: பிரசாரங்கள் இன்று இரவுடன் ஓய்கிறது

தமிழக சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதனுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன.

இதனால் அதிமுக, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தமது இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இன்று இரவு 7 மணியுடன் அனைத்து தேர்தல் பிரசாரங்களையும் முடித்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரசார நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் வெளியிடங்களில் இருந்து வந்து பிரசாரங்களில் ஈடுபட்ட, தொகுதியுடன் சம்பந்தம் இல்லாதவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்தலுடன் தொடர்புடைய எந்தவித பிரசாரங்களிலும் ஈடுபட முடியாது என்பதுடன், கருத்து கணிப்புகளை வெளியிடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 6 ஆம் திகதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகவுள்ளது. இதற்காக, மொத்தம் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் தயார் படுத்தப்படுகின்றன.

வாக்குப்பதிவுக்காக ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.