(Photo : Twitter/himel khan shajid)
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தை அடுத்து பங்களாதேஷ் முழுவதும் வன்முறை வெடித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக இஸ்லாமியக் குழு ஒன்று கிழக்கு பங்களாதேஷில் உள்ள இந்து கோவில்கள் மற்றும் ரயில் மீது ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பங்களாதேஷின் 50-வது ஆண்டு சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை டாக்காவுக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் 1.2 மில்லியன் கோவிட் -19 தடுப்பூசிகளை பரிசளித்ததுடன், அவர்களின் நிகழ்ச்சி நிரலில் பங்குபற்றிய பிரதமர் மோடி சனிக்கிழமை இந்தியாவுக்கு திரும்பினார்.
இந்நிலையில், இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக மோடி பாகுபாடு காட்டுவதாக குறிப்பிட்டு மோடியின் வருகையை எதிர்த்து பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்லாமிய குழுக்கள் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டங்களின் போது பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை வீசியுள்ளனர். அத்தோடு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல்களில் குறைந்தது 10 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை, ஹெபசாத்-இ-இஸ்லாம் குழுவுடன் தொடர்புடையவர்கள் கிழக்கு மாவட்டமான பிரமன்பாரியாவில் ஒரு ரயில் மீது மேற்கொண்ட தாக்குதலில் பத்து பேர் வரை காயமடைந்துள்ளனர்.
“பிரமன்பாரியா எரிகிறது. பல்வேறு அரசு அலுவலகங்கள் கண்மூடித்தனமாக தீ வைக்கப்பட்டன. பத்திரிகை நிறுவனங்கள் தாக்கப்பட்டன, பத்திரிகைக் கழகத் தலைவர் உட்பட பலர் காயமடைந்தனர். நாங்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறோம், உண்மையில் உதவியற்றவர்களாக உணர்கிறோம்,”என்று பிரமன்பாரியா நகரத்தின் பத்திரிகையாளர் “ஜாவேத் ரஹீம்” ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
மோடியின் விஜயத்தை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் பொலிஸாருடனான மோதல்களை அடுத்து மேலும் வலுவடைந்துள்ளன.
இதனிடையே பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு எதிராக ஹெபசாத்-இ-இஸ்லாமிய அமைப்பு ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
“எங்கள் அமைதியான ஆதரவாளர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.எங்கள் சகோதரர்களின் இரத்தம் வீணாக விடமாட்டோம்” என்று ஹெபசாத்-இ-இஸ்லாத்தின் அமைப்புச் செயலாளர் அஜிசுல் ஹக் தெரிவித்துள்ளார்.