ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவாண் ஏவுதளத்தில் இருந்து பிரேசில் நாட்டின் ‘அமேசானியா-1 ‘ உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன், “பிஎஸ்எல்வி-சி51” ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் என்கிற இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தின் கீழ் ஏவப்படும் முதல் ராக்கெட் ஆகும்.
பிரேசில் நாட்டினால் முதல் முறையாக வர்த்தகரீதியாக ஏவப்படும் செயற்கைக்கோள் ‘அமேசானியா-1 ‘ , 637 கிராம் எடை கொண்ட இவ் செயற்கைக்கோள் அமேசான் காடழிப்பை கண்காணிக்கவும், காடுகள் மற்றும் வேளாண் சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்யவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ் செயற்கைக்கோளை பிரேசில் நாட்டின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது.
ராக்கெட் ஏவப்பட்டு 17 நிமிடங்களுக்கு பிறகு 637 கிராம் எடையுள்ள ‘அமேசானியா-1’ செயற்கைக்கோள் பிரிந்து சென்று அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
இந்த “பிஎஸ்எல்வி- சி 51” ராக்கெட்டில் பிரேசில் நாட்டின் அமேசானியா-1 செயற்கைக்கோள், இந்தியாவின் சதீஸ் தவாண் செயற்கைக்கோள், ஜிடி சாட், ஜிஹெச்ஆர்சிஇ செயற்கைக்கோள், பாதுகாப்புத் துறையின் சிந்து நேத்ரா செயற்கைக்கோள் மற்றும் ஸ்ரீ சக்தி ஆகிய செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் அமெரிக்காவின் ஸ்பேஸ் பிஇஇ, மெக்சிகோவின் நானோ கனெக்ட் செயற்கைக்கோள்கள் என மொத்தம் 19 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
இஸ்ரோ 2021ஆம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்பும் முதல் ராக்கெட் இதுவாகும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படும் 78-வது ராக்கெட் மற்றும் பி.எஸ்.எல்.வி பிரிவில் 53ஆவது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் செயற்கைக்கோள் ஒன்றின் மேல் பகுதியில் பிரதமர் நரேந்திர மோதியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதுடன், பகவத் கீதையின் வாசகமும் அனுப்பப்படுவதாக அவற்றை வடிவமைத்த சென்னையை சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக் கோள்களில் 25,000 இந்தியர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.