இந்தியாவில் ஏப்ரல் 6 ஆம் திகதி தமிழக சட்டமன்றத்திற்கும் புதுவை சட்ட மன்றத்திற்கும் தேர்தல் நடக்க இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன.
இதனிடையில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அரசின் நலத்திட்ட பணிகள், புதிய மேம்பாலங்கள், புதிய கட்டிடங்கள் என திறந்துவைத்து மக்களிடையே நல்ல பெயரை சம்பாதிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
இதற்கு ஒரு படி மேலாக, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் நகைகள் மீது வாங்கிய கடனை தள்ளுபடி செய்து இருக்கிறார் முதல்வர்; மற்றொரு புறம் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வன்னியருக்கு அறிவித்திருக்கிறார்; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உள்ள சீர்மரபினருக்கு 7 சதவீத உள் ஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள ஏழை-எளிய பெண்கள் கூட்டுறவு சங்கங்களிலும் கூட்டுறவு வங்கிகளிலும் வாங்கிய கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாகவும் கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் முதல்வர் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
மேலும் ஜல்லிக்கட்டு போராட்ட நேரத்தில் போடப்பட்ட வழக்குகளும், அத்துடன் கொரோனா காலத்தில் தாக்கலான விதிமீறல் வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு பல மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து விவசாயிகள் மற்றும் பெண்கள் மனங்களில் இடம்பிடிக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டுவருவதாக கூறுகின்றனர் உள்ளூர் அரசியல் விமர்சகர்கள்.