November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் தமிழ் மாநிலச் செயலாளருமான தா. பாண்டியன் காலமனார்.

நோய்வாய்ப்பட்ட நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் தனது 89 ஆவது வயதில் இன்று காலமானார்.

தா.பாண்டியன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க் கட்சி தலைவர், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள்.

மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளிமலை பட்டி என்ற கிராமத்தில் 1932 ஆம் வருடம் டேவிட் நவமணி தம்பதியினருக்கு நான்காவது மகனாக பிறந்தார். பெற்றோர் இருவருமே கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தனர்.

காமக்கா பட்டியில் ஆரம்பக் கல்வியையும் உசிலம்பட்டியில் உயர்நிலைக் கல்வியையும் பயின்ற தா பாண்டியன் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி படிப்பை தொடர்ந்தார். பின்பு அதே பல்கலையில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்; ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகி முழுமையாக கட்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

பெற்றோர் பார்த்து தந்த ஜாய்சி என்பவரை மணமுடித்து டேவிட் ஜவஹர் என்ற மகனையும் அருணா, பிரேமா என்ற இரு மகள்களையும் பெற்றெடுத்தார்.

இல்லறத்தை விட பொது வாழ்க்கையை அதிகம் விரும்பிய தா பாண்டியன் வெகுவிரைவில் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். கட்சி பணிகளுக்காகவே சட்டம் பயின்றார் .

ஒரு கருத்து வேறுபாட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினார். 1983 இல் இருந்து 2000 ஆண்டு வரை கட்சியின் செயலாளராக இருந்தார்.

2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்சியை கலைத்து விட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழேயே தொடர்ந்தார். 2005 ஆம் ஆண்டு முதல் 3 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தின் செயலாளராக இருந்தார்.

அதைப் போலவே மிகவும் இளம் வயதில் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். தா பா என்று தோழர்களாலும் மாற்றுக் கட்சியினராலும் அழைக்கப்பட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான இவர், சொந்தக் கட்சியோ மாற்றுக் கட்சியோ தவறு செய்தால் அதனை உரக்கச் சொல்லும் உறுதியான மனம் படைத்தவர்.

தன் கட்சியை தாண்டி மாற்று கட்சியினர் செய்யும் நன்மைகளை கூட வெளிப்படையாக எடுத்துரைக்கும் பெருந்தகையாளர்.

இவர் ஆறுமுறை சட்டமன்றத்திற்கும் மூன்று முறை பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார் . சிறந்த பேச்சாற்றல் மிகுந்த இவர் எழுதுவதிலும் வல்லவர்.

ஜனசக்தி இதழில் சவுக்கடி என்ற புனைப்பெயரில் எழுதினார். 16 ஆண்டுகாலம் ஜனசக்தி இதழின் ஆசிரியராக இருந்த இவர் 20க்கும் மேற்பட்ட நூல்களையும் 5க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்களையும் கொண்டுவந்துள்ளார் .

தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை மிக்க இவர் டெல்லியில் இருந்து வரும் இந்திரா, ராஜீவ் போன்ற தலைவர்களுக்கு பல மேடைகளில் மொழிபெயர்ப்பாளராக இருந்துள்ளார்.

ராஜீவ்காந்தி வெடி விபத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக கருதப்பட்ட நபர்களில் இவரும் ஒருவர். பிறகு தீவிர சிகிச்சையில் உயிர் பிழைத்தார்.

தனது இறுதி மூச்சு வரை ஈழத்தமிழர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த தமிழகத் தலைவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர் . பழ. நெடுமாறன் உடன் இணைந்து ஈழத் தமிழர்களுக்காக நிறைய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி உள்ளார்.

இன்றளவும் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மூத்த தலைவர் தா. பாண்டியன்.

இந்திராகாந்தி ராஜீவ்காந்தி மன்மோகன் சிங் சோனியா கலைஞர் ஜெயலலிதா என அடுத்தக் கட்சி தலைவர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டார்.

89 வயதிலும் நேரம் காலம் பாராமல் பொது சேவைக்காகவே தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர் தா. பாண்டியன்.

வயது மூப்பு, நோய்த் தொற்று மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

தமிழ் மக்கள் அனைவருக்கும் தா. பாண்டியனின் இழப்பு பேரிழப்பாகும். தமிழ் வாழும் வரை அவரின் பெயரும் வாழும் என்பது நிச்சயம்.