July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பதவி விலகினார்

(Photo:@chnharish/Twitter)

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து பெரும்பான்மையை இழந்ததால் பதவி விலகுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து இராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

முதலமைச்சர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் தோல்வியடைந்ததையடுத்து அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து முறைப்படி அறிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள்  5 பேர் அடுத்தடுத்து இராஜினாமா செய்ததால் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது.

எதிர்வரும் மே மாதம் அங்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை முன்னதாக அமைச்சரவை கூடியதும் அங்கு உரையாற்றிய முதலமைச்சர் நாராயணசாமி, ஆளும் பாஜக அரசு மீது கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

மத்திய அரசு மீது எதிர்ப்பை காட்டினால் அமுலாக்கத் துறையை வைத்து மிரட்டுவதாக அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

மேலும் மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு போதிய நிதி கிடைக்கவில்லை எனவும் நாராயணசாமி அமைச்சரவையில் கூறியிருக்கிறார்.

பாஜக மத்தியில் ஆட்சியில் இருப்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாமா? என  அமைச்சரவையில் அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

அத்தோடு புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்றும், ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாகவும் கூறினார்.

முன்னைய ஆளுநர் கிரண்பேடி மூலம் அரசுக்கு தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்ததாகவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.