July 13, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சசிகலா தமிழகம் திரும்பும் தினத்தில் கலவரம் ஏற்படலாம் – அமைச்சர்கள் பொலிஸில் புகார்

சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள சசிகலா ஏழு நாள் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் வரும் 8ஆம் திகதி தமிழகம் திரும்ப உள்ளார்.

இதன் போது சசிகலா தரப்பிலிருந்து பேரணி செல்லவும் தமிழக போலிஸ் ஆணையரிடம் அனுமதியும் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், டி.டி.வி தினகரன் மற்றும் சசிகலாவின் ஆதரவாளர்கள் என கூறப்படும் சிலரால் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து சசிகலா ஆதரவாளர்கள் தற்கொலைப்படையாக மாறப்போவதாக மிரட்டல் விடுப்பதாகவும் தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்தும் வகையில் அசம்பாவிதங்கள் நடைபெறக் கூடாது என வலியுறுத்தியும் அமைச்சர்கள்,  அதிமுக அவைத் தலைவர் உட்பட சிலர் தமிழக டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு, அதிமுக யார் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், என்பதில் உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளதாக அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

சசிகலா தொடர்ந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மதுசூதனன் உள்ளிட்டோர் இருக்கும் கட்சியே அதிமுக என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் சசிகலா செயல்பட்டு வருவதாக சி.வி சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படும் சசிகலா, தினகரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் புகார் அளித்துள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் அல்லது உறுப்பினராகக் கூட சசிகலா இல்லை எனவும் அதிமுக கொடியை பயன்படுத்த அவருக்கு உரிமை இல்லை எனவும் அதிமுக அமைச்சர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்கள்.

ஊரைக் கொள்ளையடித்து சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா 4 வருடங்கள் சிறையிலிருந்து தற்போது வெளியே வருகிறார் என அமைச்சர் சி.வி சண்முகம் விமர்சித்துள்ளார் .

இதேவேளை, முன்னதாக சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று தினகரன் சவால் விடுத்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.