
மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சுமார் 9 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்துள்ள இந்தியக் கடலோரக் காவல்படையினர், அது தொடர்பாக ஐந்து இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள் மன்னார் வளைகுடா மணாலி தீவுக்கு அருகே படகில் பதுக்கி வைத்திருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு நேற்று இரவு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து இந்தியக் கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் கடற்படையினர் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இணைந்து மணாலி தீவு பகுதியில் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக படகில் இருந்த ஒருவரை சோதனையிட்ட போது, அவரிடமிருந்து பல இலட்சம் மதிப்பிலான 9 கிலோகிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்தடன் அது தொடர்பாக சந்தேகத்தில் ஐந்து பேரை கைது செய்துள்ள இந்தியக் கடலோர காவல் படையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இவ்வாறாக பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 4.5 கோடி என கூறப்படுகிறது.
இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகள், வாசனை பொருட்கள், நறுமண சோப்பு வகைகள், தமிழகத்தில் இருந்து கஞ்சா, பீடி இலைகள், உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் சமையல் மஞ்சள், மருந்து, மாத்திரைகளை கடல் வழியாக படகு மூலம் கடத்தப்பட்டு வருகின்றன.
தீவிர கண்காணிப்பு, பாதுகாப்பு கெடுபிடியையடுத்து கடத்தல் தொழிலை மர்ம கும்பல் தங்கள் ஏஜன்ட்டுகள் மூலம் கமிஷன் அடிப்படையில் அரங்கேற்றி வருகின்றதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.