photo: Facebook/ AIKSCCTamilnadu
இந்திய தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நாடு தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் பல ஆதரவளித்துள்ளன.
புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண்மை திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் கடந்த 11 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் 8 ஆம் திகதி இந்தியா தழுவிய முழு கதவடைப்பிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக விவசாயக் குழுக்கள் – மத்திய அரசு இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
எனினும் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரோ கூறுகையில்,
டிசம்பர் 8 இல் நடக்கும் ‘பாரத் பந்தில்’பங்கேற்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அன்று எங்கள் கட்சி அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடக்கும்.
இதன் மூலம் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ராகுல் முடிவை பலப்படுத்துவோம். போராட்டம் வெற்றி பெறுவதை உறுதி செய்வோம் எனக் கூறினார்.
விவசாயிகள் நடத்தும் பாரத் பந்திற்கு தமிழக விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், சமூகநல அமைப்புகள், பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் என தமிழக எதிர்க்கட்சிகளும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.