
விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் வெளியாகி 7 நாட்களில் 461 கோடி ரூபாவுக்கும் (இந்திய ரூபா) அதிகமாக வசூலித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
‘மாஸ்டர்’ படத்துக்குப் பின்னர் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘லியோ’ திரைப்படம் கடந்த 19ஆம் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ளார். கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 148.5 கோடி ரூபா வசூலை ஈட்டியதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், படம் வெளியாகி 7 நாட்கள் கடந்த நிலையில், உலக அளவில் இதுவரை 461 கோடி ரூபாவுக்கும் அதிகமான வசூலை ‘லியோ’ ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
250-350 கோடி ரூபா செலவில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தீபாவளி வரை பெரிய படங்கள் எதுவும் வெளியாகாது என்பதால் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் ஒட்டுமொத்த வசூலான 600 கோடி ரூபாவை ‘லியோ’ நெருங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.