தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பவர் தான் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா.
தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர்தான் இவர்.
நீண்டு வளர்ந்த சுருட்டை முடியுடன் காண்போரை பயமுறுத்தும் இவர், தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.
சித்திரைச் செவ்வானம் என்ற பெயரில் இந்த படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.
திரையரங்கில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் வரும் டிசம்பர் 3 ம் திகதி ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில், முதல் பார்வை போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
சித்திரை செவ்வானம் திரைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சமுத்திரகனி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வினோதய சித்தம், உடன்பிறப்பே போன்ற படங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கியுள்ள சித்திரைச் செவ்வானம் படத்தின் கதையை இயக்குனர் விஜய் எழுதியுள்ளார் என கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் புதுமுக கதாநாயகி ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார்.
குறிப்பாக தமிழ் சினிமாவில், மலையாளத்தில், தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சாய்பல்லவியின் தங்கை, பூஜா கண்ணன் இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார்.
கிட்டத்தட்ட சாய் பல்லவி போன்றே முகத்தோற்றத்துடன் காணப்படுகிறார் அவரது தங்கை பூஜா கண்ணன்.
சமுத்திரகனி, பூஜா கண்ணன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஜொலிக்கின்றனர்.
இவர்களுடன் ரீமா கல்லிங்கல், இயக்குநர் சுப்ரமணிய சிவா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
சித்திரைச் செவ்வானம் அப்பா, மகள் பாசத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
டிசம்பர் 3 ஆம் திகதி ஜி-5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் தனுஷ், படம் வெற்றிபெற ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்த போஸ்டரில் தன்னுடைய இளவயது மகளை சைக்கிளில் வைத்து ஓட்டி செல்லும் தந்தையாக சமுத்திரக்கனி காட்டப்பட்டுள்ளார்.
ஒரு கிராம பின்னணியை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருப்பது மோஷன் போஸ்டரில் நமக்கு தெரிய வருகிறது.
மோஷன் போஸ்டரில் முதலில் சிறு வயது குழந்தையுடன் சைக்கிளில் வரும் சமுத்திரக்கனி, பின்னர் இளம்பருவ தனது மகளுடன் சைக்கிளில் வருகிறார்.இறுதியாக மகள் இல்லாமல் ஒரு சோகம் கலந்த முகத்துடன் தனியாக சைக்கிளில் வருவது அதில் காட்டப்பட்டுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கவிஞர் வைரமுத்துவின் கைவண்ணத்தில் உருவான சித்திரைச் செவ்வானம் படத்தின் பாடல்களுக்கு, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார் .
தந்தை மகள் பாசம், புது இயக்குனர் புதுமுக நடிகை என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது சித்திரை செவ்வானம் திரைப்படம்.