January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காதலன் விக்னேஷ் சிவனுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நயன்தாரா

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தனது 37 ஆவது பிறந்தநாளை காதலன் விக்னேஷ் சிவனுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

தனது காதலனுடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாராவிற்கு பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இதன் ஒருபகுதியாக இயக்குநரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன், நள்ளிரவு 12 மணியளவில் லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் நயன் போன்ற வடிவங்களில் செய்யப்பட்ட கேக் வைத்து நண்பர்களுடன் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அடுத்த பட அறிவிப்பு அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் .

ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் பேய் படமாக உருவாக உள்ள அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

அந்தப் படம் குறித்த ஒரு போஸ்டர் மட்டும் விக்னேஷ் சிவனின் டுவிட்டரில் பதிவிடப்பட்டிருக்கிறது.

அதில் குறிப்பாக ஒரு பைபிள் ,ஒரு ஜெப மாலையுடன் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே இது கிறிஸ்தவம் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாக இந்த கதை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் ,இந்தப் படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நயன்தாரா, அனுபம் கேர், சத்யராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கண்மணியாக நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக ஹாரர் படத்தில் நடிக்கப் போவது உறுதியாகியுள்ளது.

1984 நவம்பர் 18ம் திகதி கேரளாவின் திருவல்லாவில் டயானா மரியம் குரியன் என்ற நயன்தாரா பிறந்தார்.

மலையாள தேசத்தைச் சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் சரத்குமாருடன் ஐயா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

நடிகர் ரஜினி ,விஜய் ,அஜித் ,சூர்யா ,ஆர்யா ,ஜெயம்ரவி ,விஜய் சேதுபதி ,தனுஷ் ,சிம்பு , ஜெய் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டியவர் நயன்தாரா.

தமிழ் திரையுலகில் க்யூட்டான காதல் ஜோடிகள் என அழைக்கப்படும் நயன்தாரா ,விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக பயணிப்பது ,ஒன்றாகவே வேலை பார்ப்பது என எங்கு சென்றாலும் அவர்கள் கலந்து கொள்ளும் புகைப்படங்கள் உலக அளவில் வைரலாகின்றன.

ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தாலும் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

டோரா, அறம், ஐரா,கோலமாவு கோகிலா ,கொலையுதிர் காலம், மூக்குத்தி அம்மன் , நெற்றிக்கண், மலையாள படமான நிழல் மற்றும் தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து வெளியாகியுள்ள அண்ணாத்த என தனித்துவமான படங்களை அவர் தேர்வு செய்திருக்கிறார்.

தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாக காத்திருக்கிறது காத்துவாக்கில ரெண்டு காதல் திரைப்படம்.

இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடும் நயன்தாராவுக்கு அவரது காதலரான விக்னேஷ் சிவன் அவரை புகழ்ந்து ,வர்ணித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்மணி ,தங்கமே என்னுடைய எல்லாமுமே என விக்னேஷ் சிவன் பதிவிட்டிருக்கிறார்.

அத்துடன் என்றுமே தனித்துவமிக்க, அழகு, பலம் பொருந்திய, உறுதியானவர், முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என விக்னேஷ் சிவன் வாழ்த்தியுள்ளார்.