தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார்.
டெல்லியில் நடைபெற்ற 67 ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் , குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து ரஜினிகாந்த் அந்த விருதை பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், ‘ஒத்த செருப்பு’ படத்துக்காக பார்த்திபனுக்கு சிறந்த நடுவர் தேர்வு விருதும் வழங்கப்பட்டது.
இதேவேளை ’கேடி (எ) கருப்புதுரை’ படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது, ’விஸ்வாசம்’ படத்துக்காக இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது ஆகியவையும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது கருதப்படுகின்றது. இதற்கு முன்னர் லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியான் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர் ஆகிய இருவர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்கள். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விருதினைப் பெற்றிருக்கிறார்.