January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா: மரண எண்ணிக்கை 41 ஆக உயர்வு – இலங்கையின் இன்றைய நிலவரம்

கொரோனா

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு, ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் வசித்து வந்த 51 வயதுடைய நபரொருவர் கடந்த 7 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுடன் நிமோனியா ஏற்பட்டு இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த மாதம் 23 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட சுவாச கோளாறு காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 9 ஆம் திகதி கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றுடன் நிமோனியா ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்துள்ளார்.

ராகமை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய நபரொருவர் அவரது வீட்டில் உயிரிழந்துள்ள நிலையில், ராகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை  55-60 வயதுக்கு இடைப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் வீதியில் உயிரிழந்திருந்த நிலையில், கடந்த 8 ஆம் திகதி அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவர் மரணம்

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைகள் மூலம் பூரண குணமடைந்த ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

களனி- ஹெட்டிகொட பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் குறித்த நபர் சிசிக்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்ப இருந்த நிலையிலேயே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இன்று 305 பேருக்கு தொற்று

இன்றைய தினத்தில் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 305 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 14,590 ஆக அதிகரித்துள்ளது.

மெனிங் சந்தையில் 67 பேருக்கு தொற்று

கொழும்பு மெனிங் சந்தையில் நாட்டாமை தொழிலில் ஈடுபடும் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கான பிசிஆர் பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்படி இவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மெனிங் சந்தை கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

கொழும்பில் 193 பேருக்கு கொரோனா

நேற்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்ட 356 கொரோனா தொற்றாளர்களுள் கொழும்பு மாவட்டத்தில் 193 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதில் 147 பேர், கொழும்பு சுகாதார பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 99 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 28 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தில் மூவருக்கு கொரோனா

மாரவில – மாவில பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நாத்தண்டிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிவில் பாதுகாப்புச் சேவையில் பணியாற்றும் பெண்ணும் அவருடைய 6 மற்றும் 2 வயது பிள்ளைகளுமே இவ்வாறு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மேற்படி பெண் கட்டுநாயக்கவில் பணியாற்றியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பெண்ணின் கணவரும் இதற்கு முன்னர் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார்.

கணவன் சிவில் பாதுகாப்பு பிரிவில் சாரதியாக பணியாற்றியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

4 மாத குழந்தைக்கும் மாணவிக்கும் தொற்று

பண்டாரகம சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 63 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி நிமேசா ரத்னவீர தெரிவித்தார்.

அவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்களில் 4 மாத குழந்தை ஒன்றும் அடங்குவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை மஸ்கெலியா பிரதேசத்தில், 12 வயது பாடசாலை மாணவி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மஸ்கெலியா பொதுசுகாதார பரிசோதகர் பிரிவில், 163 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலே, மேற்படி மாணவி தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

மாணவியின் குடும்பத்தில் வேறு எவரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

பேலியகொட மீன்சந்தையில் பணிப்புரிந்த மஸ்கெலியாவைச் சேர்ந்த நபரொருவின் வீட்டில், அண்மையில் நடந்த நிகழ்வுக்கு இந்தச் சிறுமி உட்பட அவரது குடும்பத்தினர் சென்றுவந்துள்ளனர் என்றும் இதனூடாகவே சிறுமி தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

இந்நிலையில் சிறுமி அவரது தாயாருடன் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சுகாதார ஒழுங்கு விதிமுறைகளை மீறிய 125 பேர் கைது

சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய மற்றும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாத குற்றச்சாட்டில் 125 பேர், கடந்த 10 நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், அப்பகுதிகளில் உள்ள அத்தியாவசிய விநியோக சேவைகள் மற்றும் மருந்தகங்கள் வழமை போல் செயல்பட முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அத்தகைய சேவைகளை முன்னெடுக்க, அந்தந்த பிரதேச செயலகம் அல்லது பொலிஸாரிடம் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தினந்தோறும் 60 மில்லியன் ரூபாய் செலவு

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக, செய்யப்படும் பிசிஆர் பரிசோதனைக்காக அரசாங்கம் நாளொன்றுக்கு 60 மில்லியன் ரூபாவை செலவிடுவதாக தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று நடைபெற்ற ஜனாதிபதி செயலணி கூட்டத்திலேயே இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய கைதிகள் வேறு விடுதிகளுக்கு மாற்றம்

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மையமாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது அங்கு சிகிச்சை பெற்றுவரும் சுமார் 150 கைதிகளை மகர சிறைக்கு மாற்ற சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை மரண தண்டனைக் கைதிகளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்டவர்களை மருத்துவ ஆலோசனையின் பேரில் தனி விடுதியில் தங்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் நூற்றுக்கும் அதிக கைதிகள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை போகம்பரை பழைய சிறைச்சாலையின் சிறைக் காவலர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடையாளம் காணப்பட்ட இவர்கள் தெல்தெனிய சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.