(Photo: BCCI/IPL)
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு ஆட்டத்தில் இரண்டு சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டு வெற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
துபாயில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களைப் பெற்றது. குவின்டன் டி கொக் 54 ஓட்டங்களை அந்த அணிக்காக பெற்றார்.
பதிலளித்தாடிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களைப் பெற ஆட்டம் சமநிலையடைந்தது.
வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் துடுப்பெடுத்த கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 5 ஓட்டங்களைப் பெற்றது.
இதன்படி 6 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் பதிலளித்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியும் 5 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள ஆட்டம் மீண்டும் சமநிலை அடைந்தது.
இதனால் வெற்றியை தீர்மானிக்க மற்றுமொரு தடவை சூப்பர் ஓவரை வீச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மீண்டும் வீசப்பட்ட சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் ஆடி 11 ஓட்டங்களைப் பெற்றது.
12 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியின் ‘கிங் மேக்கர்’ கிறிஸ் கெயில் முதல் பந்திலேயே 6 ஓட்டங்களை விளாசினார். அவருடன் ஆடிய மயங்க் அகர்வால் இரண்டு பவுண்டரிகள் அடிக்க கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி வெற்றியை தன்வசப்படுத்திக்கொண்டது.
இந்த வெற்றி மூலம் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ள பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் ஆறாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.