November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மே.இ.தீவுகள் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு தோல்வி

இலங்கைக்கு எதிராக அன்டிகுவா, சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஷாய் ஹோப் குவித்த அபார சதத்தின் உதவியுடன் 8 விக்கெட்களால் மேற்கிந்தியத் தீவுகள் அணி இலகுவாக வெற்றிபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

இந்த போட்டியில், டி-20 தொடரில் அறிமுகமாகியிருந்த இளம் வீரர்களான பெதும் நிஸங்க மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் ஒருநாள் போட்டி அறிமுகத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய தனுஷ்க குணதிலக்க (55), அணித் தலைவர் திமுத் கருணாரட்ன (52) ஆகிய இருவரும் 19.2 ஓவர்களில் 105 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

எனினும், அவர்களின் ஆட்டமிழப்பை அடுத்து தொடர்ச்சியாக வந்த வீரர்களின் பொறுப்பற்ற துடுப்பாட்டத்தினால் இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறியது.

எனினும், இந்தப் போட்டியில் அறிமுகமாகியிருந்த அஷேன் பண்டார தனியாளாக போராடி 60 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற, இலங்கை அணி 49 ஓவர்கள் நிறைவில் 232 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அத்துடன், அறிமுக ஒருநாள் போட்டியில் அரைச்சதம் பெற்ற 5 ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஜேசன் மொஹமட் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 233 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, எவின் லிவிஸ் மற்றும் ஷாய் ஹோப்பின் மிகச்சிறந்த ஆரம்ப விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்துடன், 47 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

ஷாய் ஹோப் தன்னுடைய 10 ஆவது ஒருநாள் சதத்தை பதிவுசெய்து, 110 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், எவின் லிவிஸ் 90 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இவர்களுக்கு அடுத்தப்படியாக டெரன் ப்ராவோ ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாகனாக ஷாய் ஹோப் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்,
1-0 என முன்னிலை வகிப்பதுடன், இரண்டாவது போட்டி நாளைய தினம் (12) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.