January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்டவிரோத காடழிப்புகளைக் கண்காணிக்கும் நடவடிக்கையில் விமானப்படை

File Photo: airforce.lk

இலங்கையில் இடம்பெறும் சட்ட விரோத காடழிப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க விமானப்படையினர் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.

நாட்டில் சட்டவிரோத காடழிப்பு பரவாலாக இடம்பெற்று வருவது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுவதற்கு முன்னரே அவற்றை அடையாளங்கண்டு, தடுத்து, நிறுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற முயற்சிகளைத் தடுத்து, நிறுத்த முப்படையினரும் பொலிஸாரும் விழிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதுடன், விமானப்படை தமது வளங்களை பயன்படுத்தி வான்வழி கண்காணிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் பணித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எமது எதிர்கால சந்ததியினருக்காக இயற்கை வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், வனவளங்கள் அழிக்கப்படுவது தொடர்பில் மாவட்ட செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக செயற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற காணி அபகரிப்பு சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர், காணி அபகரிப்புடன் தொடர்புபட்ட நபர்களை கைதுசெய்ய விஷேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.