கொவிட் வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்ட சீனாவில் மீண்டும் கொவிட் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் அனைத்து நாடுகளுக்கும் அது பரவியது.
எனினும் சீனாவில் 3 மாதத்துக்கு பிறகு கொவிட் பரவல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இந்நிலையில் சீனாவில் சியான் நகரில் அண்மையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நகரில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது ஹெனான் மாகாணம் யூசவ் நகரில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் தற்போது அங்கு ஊரடங்கை அமுல்படுத்துவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அங்கு பொதுப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
அனைத்து குடிமக்களும் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.