
அவுஸ்திரேலியாவின் விசேட படைப் பிரிவினர் ஆப்கானிஸ்தானில் 39 சிவிலியன்களைக் கொலை செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விசேட படைப் பிரிவினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்து முறையான விசாரணைகளின் பின்னரே தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலிய படைப் பிரிவினர் தொடர்பான போர்க்குற்ற விசாரணை முடிவுகளை அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
57 சம்பவங்கள் தொடர்பில் 300 க்கும் அதிகமானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விசாரணைகளின் முடிவில் 25 படைவீரர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக அல்லது போர்க்குற்றங்களுக்கு உதவியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2009 முதல் 2013 வரையான காலப் பகுதியில் ஆப்கானிஸ்தானில் சிறைக்கைதிகள்,விவசாயிகள் மற்றும் பொதுமக்களைக் கொலை செய்தமைக்காக 19 படைவீரர்களை விசாரணை செய்ய மேற்படி அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
அவுஸ்திரேலிய விசேட விமானப் படையணியைச் சேர்ந்தவர்களே இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளின் போது, ஒரு போர்க் கலாச்சாரத்தின் வெட்கக்கேடான பதிவுகள் வெளியாகியுள்ளதாக அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையின் தலைவர் அங்கஸ் கம்பெல் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஒவ்வொருவரும் யுத்த சட்டங்களை நன்கு அறிந்தவர்களே என்றும் சில விசேட படையினர் சட்டத்தை தம் கைகளில் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.