July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈரான் அணு ஆயுத மையம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட ட்ரம்ப்?

ஈரான் அணு ஆயுத தயாரிப்பு மையங்களை குறிவைத்து இராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்ப் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஈரான் அல்லது பிற எதிரி நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடும் என பாதுகாப்புத் துறைக்கு உள்ளேயும் வெளியேயும்  அச்சம் அதிகரித்துள்ளதாக “நியூயோர்க் டைம்ஸ் நாளிதழ்” செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் துணை ஜனாதிபதி மைக்பென்ஸ், இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ, புதிய பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டோபர் மில்லர் ஆகியோருடன் ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டத்தில் ஆராய்ந்துள்ளார்.

ஈரான் யுரேனியம் கை இருப்புக்களை கணிசமாக அதிகரித்துள்ளது என்று சர்வதேச ஆய்வாளர்கள் ஐ.நா உறுப்பினர்களுக்கு தெரிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து இந்தக்கூட்டத்தில் ஈரானில் உள்ள அணு சக்தி மையம் மீது தாக்குதல் நடத்தலாமா? என்று ட்ரம்ப் கருத்து கேட்டுள்ளார்.

ஆனால், அதிகாரிகள் அவ்வாறு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். எனவே, அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதல் முடிவுக்கு செல்லவில்லை என வெள்ளை மாளிகை கருத்து வெளியிட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பெரை அவசர அவசரமாக ட்ரம்ப் பதவி நீக்கியுள்ளமை ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

ட்ரம்ப் தனது ஜனாதிபதி பதவிக்காலத்தின் இறுதி நாட்களை எவ்வாறு பயன்படுத்தப் போகின்றார்? என்ற ஊகங்களின் மத்தியில்  அவர் அமெரிக்காவின் எதிரிகளை இலக்கு வைக்கலாம் எனஅதிகாரிகள்  அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அணுசக்தி ஒப்பந்தம்
2015 இல் அமெரிக்க ஜனாதிபதியாக பாரக் ஒபாமா பதவிக்கு வந்த போது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஈரான் பி5+1 எனப்படும் ஒப்பந்தம் ஒன்றை ஏற்றுக்கொண்டது.

அந்த ஒப்பந்தத்தில், ஈரான் அதனுடைய அணு நடவடிக்கைகளைக் குறைத்து கொள்வதாகவும் சர்வதேச கண்காணிப்பாளர்களை நாட்டினுள் அனுமதிப்பதாகவும் அதற்கு பதில் ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவி ஏற்றதும் 2018 ஆம் ஆண்டு 2015ஆம் ஆண்டின் அணு ஆயுத ஒப்பந்தத்தை விட்டு வெளியேறி ஈரான் மற்றும் ஈரானோடு வணிகம் செய்யும் அனைத்து நாடுகளின் மீதும் மீண்டும் பொருளாதாரத் தடையை விதித்தார்.

இதன் பிறகு அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான உறவு மேலும் மோசமாகியது.

இதேவேளை ஈரான் அணு ஆயுத மையம் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டிருக்கக் கூடும். ஜோ பைடன் நிர்வாகத்திற்கும் வெளியுறவுத்துறை கொள்கையிலும் பெரும் சிக்கல்கள் உருவாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.