July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”95 வீத செயற்திறனுடைய தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம்”: மொடேர்னா நிறுவனம்

அமெரிக்காவின் மொடேர்னா மருந்து உற்பத்தி நிறுவனம் தான் உருவாக்கியுயள்ள கொவிட்- 19 தடுப்பூசி 95 வீத செயற்திறன் கொண்டது எனத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் 30,000 கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இவ்விடயம் தெரியவந்துள்ளதாகவும் மொடேர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பரிசோதனைகள் 94.5 வீத செயற்திறனுடன் கொவிட்- 19 க்கு எதிராக செயற்படுவது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் இந்த தடுப்பூசி புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அடுத்த சில வாரங்களில் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கவுள்ளதாக மொடேர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், புதிய தடுப்பூசியின் செயற்திறன் குறித்த ஆரம்ப தரவுகளே காணப்படுவதாகவும், சில பிரதான சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

கொவிட்- 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதும், மருந்துகள் சிறப்பாக செயற்பட ஆரம்பிக்கும் போது தென்படும் அறிகுறிகள் தென்பட்டதாகவும் மொடேர்னா மருந்து உற்பத்தி நிறுவனத்தின் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மொடேர்னா தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டால், அமெரிக்காவினுள் முதற்கட்டமாக 20 மில்லியன் தடுப்பூசிகளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.