
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு செய்யப்படுவது உறுதியாகி ஒரு வார காலத்தின் பின்னர் சீனா அவருக்கு வாழ்த்துக்களை இன்று தெரிவித்துள்ளது.
‘நாங்கள் அமெரிக்க மக்களின் தெரிவினை மதிக்கின்றோம், நாங்கள் பைடனிற்கும் கமலா ஹாரிஸுக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்’ என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் வாங்வென்பின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் அந்த நாட்டின் தேர்தல் சட்டங்கள், நடைமுறைகளிற்கு ஏற்ப தீர்மானிக்கப்படும் என்பதை நாங்கள் அறிகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா ஜோ பைடனிற்கு வாழ்த்து தெரிவிப்பதை ஏன் தாமதப்படுத்தியது என்பது தெளிவற்ற விடயமாக காணப்படுகின்றது என பிபிசி குறிப்பிட்டுள்ளது.
டிரம்ப் எதிர்பாராத வெற்றியை பெறக்கூடும் என்பதால் பைடனை சீனா வாழ்த்தாமல் விட்டிருக்கலாம், ஆனால் ஏனைய நாடுகள் பைடனை வாழ்த்தியுள்ள நிலையில் தான் தொடர்ந்தும் வாழ்த்துக்களை தெரிவிக்காமல் இருப்பது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளவருடன் முரண்பாடுகளை தோற்றுவிக்கலாம் என்பதால் சீனா இனறு தனது கருத்தினை வெளியிட்டிருக்கலாம் என பிபிசி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடான உறவுகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த சீனா விரும்பலாம். ஆனால் சீனாவை அமெரிக்கா நோக்கும் விதத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.