அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு வெளிநாட்டுத் தலைவர்களிடமிருந்து வரும் செய்திகள் அவரிடம் சென்றடைவதை டிரம்ப் நிர்வாகம் தடுத்து வருவதாக இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டின் சிஎன்என் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஜோ பைடனுக்கு வெளிநாட்டுத் தலைவர்களிடமிருந்து வந்துள்ள பல செய்திகள் இராஜாங்க திணைக்களத்தில் தேங்கிக் கிடப்பதாகவும், ட்ரம்ப் நிர்வாகம் அவை பைடனை சென்றடைவதை தடுத்து வருவதாகவும் அமெரிக்காவின் வெளியுறவுக்குப் பொறுப்பான இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவருக்கு அனைத்து தொடர்பாடல் உதவிகளையும் இராஜாங்க திணைக்களம் வழங்குவது பாரம்பரிய நடைமுறையாக காணப்படுகின்ற போதிலும், ஜோ பைடனின் வெற்றியை டொனால்ட் டிரம்ப் அங்கீகரிக்க மறுப்பதால் வெளிநாட்டுத் தலைவர்களின் பல செய்திகளை பெறமுடியாத நிலையில் ஜோ பைடன் காணப்படுகின்றார்.
இராஜாங்க திணைக்களத்தின் உதவி இல்லாமலேயே பைடனுடன் பல வெளிநாட்டுத் தலைவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். பைடன் குழுவினரை நேரடியாக தொடர்புகொள்ள முடியாது என்பதை உணர்ந்துகொண்டுள்ள வெளிநாட்டுத் தலைவர்கள் ஒபாமா நிர்வாகத்தின் காலத்தில் இராஜதந்திரிகளாக இருந்தவர்களை அணுகியுள்ளனர்.