January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜோ பைடனை வாழ்த்திய தலைவர்கள் வரிசையில் பாப்பரசரும் இணைந்தார்!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் பாப்பரசர் பிரான்சிஸுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

“பாப்பரசர் வழங்கிய ஆசீர்வாதத்திற்காகவும் வாழ்த்துகளுக்காகவும் ஜோ பைடன் இதன்போது நன்றி தெரிவித்தார் என்று பைடனின் ஆட்சிமாற்றக் குழு தெரிவித்துள்ளது.

உலகில் சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனித குலத்தின் ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காக பாப்பரசர் வகிக்கும் தலைமைத்துவத்தை பாராட்டிய பைடன்,  பருவநிலை மாற்றம், குடியேறிகள் விவகாரம் போன்ற நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக பாப்பரசருடம் இணைந்து பணியாற்றுவதற்கும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த வாரம் ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியிருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் பைடன் வெற்றிக்கு செல்வாக்கு மிக்க உலக நாடுகளின் அங்கீகாரமாக இந்த அழைப்புகள் பார்க்கப்படுகின்றன.

தேர்தல் தோல்வியை ஒத்துக்கொள்ள டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்தும் மறுத்துவருகின்ற நிலையில், கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரும் வத்திக்கான் சிட்டி அரசு தலைவருமான பாப்பரசரும் இப்போது பைடனை தொலைபேசியில் வாழ்த்தியுள்ளமை முக்கிய விடயமாக கருதப்படுகின்றது.

ஜோ பைடன் தான் அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள இரண்டாவது கத்தோலிக்கர் ஆவார். அவருக்கு முன்னர் ஜோன் எஃப் கென்னடி 1961- இல் தெரிவானார்.

ஏனைய அனைத்து அமெரிக்க ஜனாதிபதிகளும் கிறிஸ்தவ மதத்தின் வேறு உட்பிரிவுகளைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.