கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் சிலருக்கு உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் 20 வீதமாவர்கள், தொற்று உறுதியாகி முதல் 3 மாதங்களுக்குள் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்காக சிகிச்சை பெறவேண்டி ஏற்பட்டுள்ளதாக சுமார் 62 ஆயிரம் கொவிட் நோயாளிகளின் மருத்துவ தரவுகளை ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அவ்வாறான நோயாளிகள் குறிப்பாக மனச்சோர்வு, மனத்தவிப்பு அல்லது தூக்கமின்மை போன்ற உளவியல் ரீதியான குழப்பங்களை எதிர்நோக்கியுள்ளதாக பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அவர்களுக்கு மீளச் சரிசெய்ய முடியாத அளவுக்கு ‘டிமென்ஷியா’ எனப்படும் நினைவாற்றல்-இழப்பு நோய் ஏற்படுவதற்கான ஆபத்து இரட்டிப்பாகும் நிலையும் உள்ளது.
இவ்வாறானவர்களுக்கு தகுந்த பராமரிப்பும் ஆரோக்கியமான சூழலும் வழங்கப்பட வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால், இந்த உளவியல் பாதிப்புகளுக்கு நேரடிக் காரணிகளாக எவற்றையும் ஆய்வாளர்கள் முன்வைக்கவில்லை.
சம்பந்தப்பட்ட நோயாளிகளின் சமூகப் பொருளாதாரக் காரணிகள், புகைத்தல் மற்றும் போதைப்பழக்கம் போன்ற விடயங்கள் இதில் தாக்கம் செலுத்தியுள்ளதா என்பது பற்றி ஆய்வின் போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எனினும், கொவிட்-19 பரவல் ஏற்படுத்தியுள்ள மன-அழுத்தச் சூழ்நிலை பொதுவான காரணியாக இருக்கலாம் என்று ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் உளவியல் ஆய்வுத்துறையின் பேராசிரியர் போல் ஹாரிசன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து கிடைத்த சுமார் 69 மில்லியன் பேரின் மருத்துவ ஆவணங்களை ஒப்பிட்டு நடத்திய ஆய்வுகளிலேயே இந்தத் தகவல்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.