November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளரை நியமித்தார் ட்ரம்ப்

அமெரிக்காவின் புதிய செயல் பாதுகாப்பு செயலாளராக கிறிஸ்டோபர் சி. மில்லரை நியமித்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் பாதுகாப்பு செயலாளராக இருந்த மார்க் எஸ்பர் நீக்கப்பட்டுள்ளதாக   ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

“மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்தின் உயர் மதிப்பு மிக்க இயக்குனர் கிறிஸ்டோபர் மில்லர் அந்த பதவிக்கு நியமிக்கப்படுகிறார்.

அவர் பாதுகாப்பு துறையின் பொறுப்பு அமைச்சராக உடனடியாக பதவி ஏற்கிறார். எஸ்பரின் பணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நிகழாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த மறுப்பு தெரிவித்ததில் இருந்து பாதுகாப்பு அமைச்சராகவிருந்த எஸ்பருக்கும் டிரம்புக்கும் இடையே  விரிசல் நிலை காணப்பட்டு வந்தது.

அமெரிக்கத் தேர்தலில் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பதவியை துறக்கும் முன்பாக, பல அதிரடி முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பெரை அவசர அவசரமாக டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கியுள்ளமை  ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

பதவி நீக்கப்பட்டுள்ள எஸ்பர், ஈரான்  குறித்தும் அதன் இராணுவ அதிகாரியை இலக்கு வைத்து ஈராக்கில் இடம்பெற்ற ஆளில்லா விமான தாக்குதல்கள்  தொடர்பில்  டிரம்புடன் முரண்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் தனது ஜனாதிபதி பதவிக்காலத்தின் இறுதிநாட்களை எவ்வாறு பயன்படுத்தப்போகின்றார் என்ற ஊகங்களின் மத்தியில் அதிகாரிகள் அவர் அமெரிக்காவின் எதிரிகளை இலக்கு வைக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதி ட்ரம்ப் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளதாக  நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.