சீனாவின் சினோவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பரிசோதனை செய்வதை பிரேசில் இடைநிறுத்தியுள்ளது.
சீனாவின் மருந்து தயாரிப்பு நிறுவனமான சினோவாக் பயோடெக், பிரேசிலின் புட்டன்டன் நிறுவனத்தின் உதவியுடன் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை பிரேசிலில் ஆரம்பித்திருந்தது.
சீனா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றவர்களுக்கு கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்ட காரணத்தினால், பிரேசில் தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம் பரிசோதனைகளை தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளது.
ஒக்டோபர் 29 ஆம் திகதி பரிசோதனைகளில் பங்கேற்றவர்களில் ஒருவருக்கு கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டதே சினோவாக் பயோடெக் நிறுவனத்தின் பரிசோதனைகள் இடைநிறுத்தப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
மரணம் அல்லது அபாயகரமான பக்க விளைவுகள் ஏற்படுவதற்கும், மருத்துவ சாதனங்கள் மூலம் தொற்று பரவுவதற்குமான சாத்தியங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
130,000 தொண்டர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த பரிசோதனை, தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னர் இடம்பெறும் முக்கிய நடவடிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சினோவாக் பயோடெக் நிறுவனத்தின் பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டமை, சீனாவின் கொரோனா மருந்து மற்றும் தடுப்பூசி தயாரிப்பு முயற்சிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவாக சர்வதேச அளவில் நோக்கப்படுகின்றது.