January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா முதல் ஜெனிவா வரை; பைடன் கொண்டுவரப் போகும் மாற்றங்கள் என்ன?

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி ஊர்ஜிதமாகியதைத் தொடர்ந்து, ஜோ பைடன் ஆட்சி மாற்றத்துக்கான நிர்வாகத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடைபிடித்து வந்த கொள்கைகள் பலவற்றிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

ஜோ பைடனை ஜனாதிபதியாகவும் கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதியாகவும் கொண்ட புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைக்குத் தகுதியானவர்களை நியமிப்பது குறித்து ஜனநாயகக் கட்சி தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.

கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி, இன சமத்துவம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவற்றை கையாள்வதற்கு முன்னுரிமையளிக்கப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், தற்போதைய ஜனாதிபதி ட்ரம்பின் கொள்கைகளில் வரவுள்ள மாற்றங்கள் மற்றும் பைடன் – ஹாரிஸ் அணியின் திட்டங்கள் தொடர்பாக பின்வரும் தகவல்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

“ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கை கொடுப்போம்”: சீனா

‘20 ஆவது திருத்தம்’ தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் விசனம்!

‘ஈழத் தமிழர் விவகாரத்தை’ எப்படி கையாளப் போகின்றது பைடனின் அமெரிக்கா?

கொரோனா: விஞ்ஞானிகள்- துறைசார் நிபுணர்களின் செயலணியை  உருவாக்குதல்

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியமாக இருந்ததாக விமர்சனங்கள் இருந்தன. அமெரிக்காவில் இதுவரை 10 மில்லியனுக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, 243,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தடுப்புக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாகவும், அமெரிக்கர்கள் அனைவருக்கும் நம்பகமான, இலவச கொரோனா பரிசோதனைகளுக்கான வாய்ப்பை வழங்கவுள்ளதாகவும் பைடன் உறுதியளித்துள்ளார்.

ட்ரம்ப முகக் கவசம் அணிவதை தவிர்த்து வந்த நிலையில், பைடன் முகக் கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றம்: பாரிஸ் உடன்படிக்கையில் மீண்டும் இணைதல்

195 நாடுகள் கைச்சாத்திட்ட பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா விலகிவிட்டது. அந்த உடன்படிக்கையில் பைடன் மீண்டும் இணைந்துகொள்ளவுள்ளார்.

2050 ஆம் ஆண்டாகும் போது, காற்று மாசடைதலை பூச்சியமாகக் குறைப்பதற்கான திட்டமும் பைடன் நிர்வாகத்திடம் உள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலகும் தீர்மானத்தை இரத்து செய்தல்

உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பிரசாரம் செய்த ட்ரம்ப், அதிலிருந்து அமெரிக்கா விலகவுள்ளதாக அறிவித்திருந்தார். குறித்த தீர்மானத்தை பைடன் இரத்து செய்யவுள்ளதாகத் தெரியவருகின்றது.

முஸ்லிம் நாடுகள் மீதான பயணத் தடைகளை நீக்குதல்

7 முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு பயணத் தடை விதித்துள்ள ட்ரம்ப், மேலும் பல நாடுகளையும் குறித்த பட்டியலில் சேர்க்கவுள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், முஸ்லிம் நாட்டு பிரஜைகளுக்கான பயணத் தடையை நீக்கவுள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் இணைதல்

ஐநா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா 2018- இல் விலகியது. இதனால் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் உட்பட பல நாடுகள் தொடர்பில் அமெரிக்காவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்த தீர்மானங்களும் சர்வதேச ரீதியான அழுத்தங்களும் தொய்வு நிலையை அடைந்தன.

இந்நிலையில் மீண்டும் ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா இணையும் சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன.

குழந்தைகளாக புலம்பெயர்ந்தவர்களுக்கு ‘சட்டபூர்வ குடியேறிகள் அந்தஸ்து’ வழங்குதல்

குழந்தைகளாக அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் காலத்தில் சட்டபூர்வமாக குடியேறிகள் அந்தஸ்து வழங்கப்பட்டது. ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் அந்த நடைமுறை இல்லாமலாக்கப்பட்டதால் பெருமளவிலானோர் சட்டவிரோதமாக குடியேறிகளாக கருதப்பட்டனர். இந்தக் கொள்கையை பைடன் மீண்டும் கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளார்.

 

இன சமத்துவத்தை உறுதி செய்தல்

ட்ரம்ப் ஆட்சியில் கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக விமர்சனங்கள் இருந்தன. ஜோ பைடன் அமெரிக்காவில் இன சமத்துவத்தை நிலைநாட்டுவதாக உறுதியளித்துள்ளார்.

நிர்வாகத் திட்டங்களை வகுக்கவும், அமைச்சரவையை நியமிக்கவும் வழங்கப்படும் ஆட்சி மாற்றத்துக்கான காலத்தைத் தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஜோ பைடன் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார்.

ஆனால், ஜனாதிபதி தேர்தலின் போது சில மாநிலங்களில் வாக்கு மோசடி இடம்பெற்றதாகக் குற்றம்சாட்டி நீதிமன்றத்தை நாடியுள்ள டொனால்ட் ட்ரம்பிடமிருந்து சுமூகமான ஆட்சிமாற்றத்துக்கான சமிக்ஞை எதுவும் இன்னும் வெளியானதாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.