கொரோனா வைரஸுக்கு எதிரான முதலாவது ‘வெற்றிகரமான’ தடுப்பு மருந்து 90வீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு பாதுகாப்பளிக்கக் கூடியது என்று ஆரம்ப கட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தத் தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள ஃபைஸர்(Pfizer) மற்றும் பையான்டெக் (BioNTech) ஆகிய நிறுவனங்கள் “மனித குலத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் ஒரு மகத்தான நாள்” என்று இந்த வெற்றியை வர்ணித்துள்ளன.
ஆறு நாடுகளை சேர்ந்த 43,500 பேரிடம் இந்த மருந்து பரிசோதனை செய்யப்பட்டதில், “எந்தவொரு பாதுகாப்பு தொடர்பான சிக்கலும் எழவில்லை” என்பது உறுதியாகியுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கான அவசர அனுமதிக்காக விண்ணப்பிக்கவுள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி, தென் ஆபிரிக்கா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரேஸில், ஆர்ஜெனடீனா ஆகிய நாடுகளில் மேற்கொண்ட பரிசோதனையிலேயே இந்தத் தடுப்பு மருந்து 90 வீதமானவர்களுக்கு பாதுகாப்பானது என்பது உறுதியாகியுள்ளது.
“மைல்கல்”
இந்த வருட இறுதிக்குள் 50 மில்லியன் ஊசி மருந்துகளையும் 2021க்குள் 1.3 பில்லியன் ஊசி மருந்துகளையும் தம்மால் விநியோகிக்க முடியும் என்று ஃபைஸர் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மூன்று வார இடைவெளியில் இரண்டு தடவைகள் இந்த ஊசி மருந்து ஒருவருக்கு கொடுக்கப்பட வேண்டும்.
‘உலக சுகாதார நெருக்கடியை முடிவிற்கு கொண்டுவருவதற்கான முக்கிய தீர்வினை வழங்கும் நிலையை நாங்கள் நெருங்கி விட்டோம்’ என ஃபைஸர் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வில் பங்கெடுத்திருந்த பையான்டெக் நிறுவனத்தின் பேராசிரியர் உகுர் சஹின் இந்த தடுப்பு மருந்தை ‘ஒரு மைல்கல்’ என வர்ணித்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிராக பல தடுப்பு மருந்துகளின் பரீட்சார்த்த முயற்சிகள் பல இடங்களில் இடம்பெறுகின்றன. அவை மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளன.
எனினும் இந்த மருந்தே இப்போது முழுமையான வெற்றிகரமான முடிவுகளை காண்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தடுப்பு மருந்தும் சிறந்த சிகிச்சை முறைகளுமே தற்போதைக்கு ஒரேயொரு வழியாக பார்க்கப்படுவதாக இந்த செய்தியை வெளியிட்டுள்ள பிபிசி தெரிவித்துள்ளது.
யாருக்கு கிடைக்கும்?
அனைவருக்கும் உடனடியாக இந்த மருந்துகள் கிடைக்கப்போவதில்லை. ஒவ்வொரு நாடும் யாருக்கு முன்னுரிமை வழங்குவது என தீர்மானிக்கவுள்ளன.
மருத்துவமனை பணியாளர்களுக்கும் பராமரிப்புத் தாதியருக்கும் முன்னுரிமை வழங்கப்படலாம். மிகவும் பலவீனமானவர்களுடன் அவர்கள் பணியாற்றுவதே இதற்கு காரணம். அத்தோடு இலகுவில் மோசமாக நோய்வாய் படக்கூடியவர்களாக உள்ள முதியவர்களுக்கும் இந்த தடுப்பு மருந்து முதலில் கிடைக்கலாம்.
பிரித்தானியாவில் முதியவர்களுக்கும் முதியோர் இல்லங்களில் அவர்களை பராமரிப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.