அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு உலகத்தலைவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சீனாவும், ரஷ்யாவும் அமைதி காத்துவருகின்றன.
ட்ரம்ப் பதவியில் இருந்த வரை சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அந்த நாட்டின் இறக்குமதி பொருட்கள் மீது வரி விதிப்புகளை விதித்தார்.
அதுமட்டுமல்ல, உலக அளவில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க, இந்தியா உட்பட சீனாவுக்கு எதிரான எல்லா நாடுகளுடனும் ஆதரவாகவும் ட்ரம்ப் செயல்பட்டார்.
அதேபோல ட்ரம்பின் தோல்வியை சித்தரித்து சீன அரசு பத்திரிகையொன்று கேலி சித்திரம் ஒன்றை வெளியிட்டது. எனினும் சீன மக்கள் பைடனுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை பைடன் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின்போது, ரஷ்யா மீது ட்ரம்ப் மென்மையான அணுகுமுறையை கொண்டிருந்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
மேலும் ரஷ்யாவை எதிர்ப்பு நாடாக கருதுவதாகவே வெளிப்படையாக கூறியிருந்தார். ஆனால், எதிர்வரும் காலங்களில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே பைடன் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றைக் கருத்தில் கொண்டுதான் இன்னும் பைடனுக்கு ரஷ்யா வாழ்த்து தெரிவிக்கவில்லையா? என சர்வதேச அரசியலில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோ பைடனின் வெற்றிக்கு பல உலகத் தலைவர்கள் உடனடியாக பாராட்டுகளை தெரிவித்தனர். மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் சோலியே முதன்முதலாக பைடனை வாழ்த்தியவர்.
அமெரிக்க ஊடகங்கள் பைடனின் வெற்றியை அறிவித்து 24 நிமிடங்களுக்குள் அவர் தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன், துருக்கி அதிபர் ரிசெப் தய்யீப் எர்துவான் ஆகியோரும் இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை.