January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா வைரஸை ஒழிப்பதற்காகவே மக்கள் ஆணை’: வெற்றியை நெருங்கியுள்ள பைடன்

ஜோ பைடன்

Photo: Facebook/ Joe Biden

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று, பொருளாதார வீழ்ச்சி, பருவநிலை மாற்றம் மற்றும் இனவெறி ஆகியவற்றைக் கையாள்வதற்காகவே தனக்கு மக்கள் ஆணை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கைகள் தெளிவானதும் உறுதியானதுமான செய்தியைச் சொல்வதாகவும், தாம் இந்தத் தேர்தலை வெற்றிபெறப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸுடன் இணைந்து ஜோ பைடன் தேர்தல் வெற்றி உரையை நிகழ்த்த இருந்த போதிலும், தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகாத நிலையில், தாம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக ஆதரவாளர்களுக்கு அறிவிப்பதற்காக உரையாற்றியுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராக 4 மில்லியனுக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசம் காணப்படுவதாகவும், 300க்கும் அதிகமான தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்று, வெற்றி பெறவுள்ளதாகவும் ஜோ பைடன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கு கிடைக்காதளவு,  74 மில்லியனுக்கு மேற்பட்ட வாக்குகள் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பைடன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், “இரு கட்சி வாக்காளர்களும் எதிர்த் தரப்பினராக இருந்தாலும், எதிரிகள் அல்ல” என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.