அமெரிக்காவில் நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.
இதுவரை வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள மாநிலங்களின் முடிவுகள் பிரகாரம், தேர்தல் கல்லூரி வாக்குகளில் 273 ஐ ஜோ பைடன் வென்றுள்ளார். குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகளை வென்றுள்ளனர்.
அமெரிக்காவின் 50 மாநிலங்களினதும் சனத்தொகைக்கு ஏற்ப தேர்தல் கல்லூரியில் ஒதுக்கப்பட்டுள்ள 538 வாக்குகளில் குறைந்தது 270 வாக்குகளை பெற்றவரே ஜனாதிபதியாக வெற்றிபெற முடியும்.
அதன்படி, இறுதி 5 மாநிலங்களின் முடிவுகள் வெளியாக முன்னமே போதுமான வாக்குகளுடன் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.
மாநிலவாரியான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகத் தொடங்கியது முதலே பைடனே ஒட்டுமொத்த வாக்குகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தார்.
எனினும், இம்முறை அளிக்கப்பட்ட தபால் வாக்குகளின் வரலாறு காணாத எண்ணிக்கை காரணமாக சில மாநிலங்களில் முடிவுகளை விரைவாக அறிவிப்பதில் சிக்கல் நிலை காணப்பட்டது.
பைடனுக்கு கைகொடுத்த பென்சில்வேனியா
44 மாநிலங்களின் முடிவுகளின் படி, 253 தேர்தல் கல்லூரி வாக்குகளை பெற்றிருந்த ஜோ பைடனுக்கு ‘270 வாக்குகள்’ என்ற மைல்கல்லை எட்ட மேலும் 17 வாக்குகளே தேவைப்பட்டன.
ஆனால் கடும் போட்டி நிலவிய இறுதி 6 மாநிலங்களில், பென்சில்வேனியா ( 20 வாக்குகள்) மற்றும் ஜோர்ஜியா (16 வாக்குகள்) ஆகிய இரண்டு பெரிய மாநிலங்களிலும் எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் ட்ரம்பே ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்தார்.
அமெரிக்காவில் இன்று வெள்ளிக்கிழமை வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துகொண்டிருந்தபோது, இரண்டு மாநிலங்களும் பைடன் பக்கம் திரும்பின.
குறிப்பாக, பென்சில்வேனியாவை வென்றதால் பைடனின் வாக்குப் பலம் 273 ஆக உயர்ந்தது. மிகுதி 5 மாநிலங்களின் வாக்குகள் தேவைப்படாமலேயே பைடனின் வெள்ளை மாளிகைக்கான பாதை இலகுவானது.
பலத்த போட்டி கொடுத்த ட்ரம்ப்
சில மாநிலங்களில் ஆரம்பத்தில் டொனால்ட் ட்ரம்ப் தரப்பு முன்னிலையில் இருந்த போதிலும், தபால் வாக்குகள் எண்ணப்படத் தொடங்கியதும் நிலைமை மாறியது.
இந்தப் பின்னணியில், சில மாநிலங்களின் முடிவுகளை ஏற்க மறுப்பதாகக் கூறிய ட்ரம்ப் அணி, வாக்களிப்பில் ‘மோசடி’ இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டியது; நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடர்ந்துள்ளது.
அரிசோனா, ஜோர்ஜியா, விஸ்கொன்ஸின் மற்றும் பென்சில்
வேனியா ஆகிய போட்டி மிகுந்த மாநிலங்களில் நீண்ட தாமதத்தின் பின்னரே முடிவுகள் வெளியாகின.
தேர்தலுக்கு முன்கூட்டிய கருத்துக் கணிப்புகள் ஜோ பைடனுக்கே சாதகமான சூழலை வெளிப்படுத்தியிருந்த போதிலும், கள நிலவரம் அவருக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை.
பல முக்கிய மாநிலங்களில் கருத்துக் கணிப்புகளையும் மீறி டரம்ப் வாக்குகளை குவித்திருந்தார்.
டெக்ஸாஸ், ஒகாயோ, அயோவா உள்ளிட்ட முக்கிய மாநிலங்களை தக்கவைத்துள்ள ட்ரம்ப், இழுபறிகளுக்கு பேர் போன புளோரிடா மாநிலத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.
அனால், நியூ ஹாம்ப்ஷயர், மினசோட்டா ஆகிய மாநிலங்களை கைப்பற்றும் முயற்சியில் ட்ரம்ப் தோல்வியடைந்தார்.
‘வரலாற்றுத் தேர்தல்’
இந்தத் தேர்தலில் ஜோ பைடனை சுமார் 75 மில்லியன் வாக்காளர்கள் ஆதரித்துள்ளனர். இது தான் இதுவரை அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு கிடைத்துள்ள ஆகக் கூடுதலான வாக்கு எண்ணிக்கையாகும்.
டொனால்ட் ட்ரம்பை சுமார் 70 மில்லியன் பேர் ஆதரித்துள்ளனர். அதாவது, 2016 ஐ விட 7 மில்லியன் வாக்குகள் கூடுதலாக அவர் இம்முறை பெற்றுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் கடந்த 100 நூறாண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சுமார் 100 மில்லியன் பேர் ( 10 கோடி) இம்முறை தபால் மூலம் வாக்களித்திருந்தனர்.
அதேபோல், கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒட்டுமொத்தமாக 66.9 வீத வாக்களிப்பு (சுமார் 160 மில்லியன் வாக்குகள்) இம்முறை பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.