January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெ. ஜனாதிபதி தேர்தல்: ஜோ பைடன் கட்சியினர் சதி முயற்சி – ட்ரம்ப் குற்றச்சாட்டு

(Photo: Donald J.Trump/Facebook)

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவில் ஜோ பைடன் கட்சியினர் சதி செய்ய முயற்சி செய்கின்றனர்.தேர்தல் குறித்து தவறான கருத்தை முன்வைக்கும் விதத்தில் ஜோ பைடனின் உரை அமைந்துள்ளதாக  டொனால்ட் ட்ரம்ப்  தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி தேர்தலில் நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. முழு முடிவுகள் வரும் வரை கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும்” என்று ஜோ பைடன் டெலாவரில் உரையாற்றினார்.

இதனையடுத்து ட்ரம்ப் “நாங்கள் பெரு வெற்றியை பெற்றுள்ளோம் ஆனால் ஜனநாயக கட்சியினர் தேர்தல் முடிவுகளை திருட முயல்கின்றனர். அதனை நாங்கள் அனுமதிக்கமாட்டோம், தேர்தல் முடிவடைந்த பின்னர் வாக்குகளை செலுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “மிகப்பெரிய வெற்றி வரப்போகிறது. இன்று இரவு ஓர் அறிக்கை வெளியிடப்போகிறேன்” என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார்.

ஓக்லஹோமா, கென்டக்கி, இண்டியனா, அர்கன்ஸாஸ், டென்னெஸ்ஸி, வெஸ்ட் வர்ஜினியா ஆகிய மாநிலங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.