பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில், அடியாலா சிறைச்சாலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் அவருக்கு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2022ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இம்ரான் கான் தற்போது சிறையில் உள்ளார்.
இந்நிலையில் 2022 மார்ச் 27 அன்று ஒரு பேரணியில் தன்னை பதவியில் இருந்து நீக்க அமெரிக்க அரசு பாகிஸ்தான் அரசுக்கு ஒரு ரகசிய தகவல் அனுப்பியதாகவும், அது வாஷிங்டன் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து வந்ததாகவும் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்து, அந்த சதி தொடர்பான கடிதம் தன்னிடம் உள்ளதாக கூட்டத்தினரை பார்த்து ஒரு கடிதத்தையும் காட்டினார்.
ஆனால், பாகிஸ்தான் அரசும், அமெரிக்க அரசும் இம்ரான் கானின் குற்றச்சாட்டை மறுத்தன.
2022 ஏப்ரல் 10 அன்று கூட்டணி கட்சிகள் இம்ரான் கான் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விளைவாக அவர் பதவி இழந்தார்.
எவ்வாறாயினும் ஒரு முன்னாள் பிரதமராக இருந்தும் அதனை பொதுவெளியில் அம்பலப்படுத்த முயன்றதால், அரசாங்க ரகசியத்தை காக்க தவறியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
“சைபர் வழக்கு” என பெயரிடப்பட்ட இதனை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
ஆனால், தொடர்ந்து ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு இவ்வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில், அடியாலா சிறைச்சாலையில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில், நீதிபதி அபுல் ஹஸ்னத் ஜுல்கர்னைன், இம்ரான் கானும், அவரது கட்சியின் துணைத்தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி என்பவரும் குற்றவாளிகள்தான் என தீர்ப்பு வழங்கி, அவர்களுக்கு 10 வருட சிறை தண்டனையும் வழங்கியுள்ளார்.
இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.