
பிரித்தானியா தனது பயங்கரவாத அச்சுறுத்தல் நிலையை ஆபத்தானது என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது.
இதுவரை நாட்கள் குறிப்பிடத்தக்கது என்ற அளவில் காணப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை தற்போது ஆபத்தானதாக மாறியுள்ளது.
இதன் மூலம் பிரித்தானியாவில் எந்த வேளையிலும் தாக்குதல் இடம்பெறலாம் என பாதுகாப்பு அதிகாரிகள் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.எனினும் இது தொடர்பில் எந்தவித புலனாய்வு தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
ஒஸ்ரியாவில் நேற்று நால்வர் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையிலேயே பிரித்தானியா தனது பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் நிலையில் மாற்றத்தினை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாத்திரமே என டுவிட்டரில் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல், விசேடமாக எந்த அச்சுறுத்தலையும் அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொதுமக்கள் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கவேண்டும் எனவும் உள்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.